செவ்வாய், 30 டிசம்பர், 2008

டஸ் என்று ஒருவன்


டஸ் பற்றி பதிவு போட வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணருகின்றேன். நீங்கள்
டஸ் என்றால் என்ன என்று இப்படி அவனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
டஸ் சராசரி மாணவன் ( அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன். நான் சொல்வதை சற்று கற்பனை செய்து பார்த்து விட்டால் அவனை நீங்கள் கண்டு விடலாம். நல்ல சிகப்பு நிறம் தட்ட குச்சியை விட சற்று பருமனான தேகம். பந்தா பண்ணுவது என்றால் என்னவென்ற தெரியாத அப்பாவி பிள்ளை (உண்மையிலே அவனுக்கு பந்தா பண்ணுவது என்றால் என்ன வென்றே தெரியாது )

நாங்கள் சப்பை பிகரு முன்னால கூட அலம்பல் பண்ணிதிரியும் போது அவன் யாரையும் ஏறடுத்து பார் பார்ப்பதில்லை ஏன் என்று எங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை தெரியவில்லை. பள்ளி காலங்களின் இந்த கூத்து அரங்கேறும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் ஏமாந்தாலும் மறுபடியும் அந்த காரியத்தையே செய்வதால் எங்களுக்கு ஒருபோதும் அலுப்பதில்லை. அந்த காரியம் என்னவென்றால். பள்ளி காலங்களில் கடைசி பாட வேளைகளில் பெரும்பாலும் ஆசிரியர் வருவது இல்லை. டஸ் குறட்டையுடன் தூங்கிக்கொண்டு இருப்பான். அந்த வேளைகளில் நமது டிஸ் ( கேபிள் காரன்) அல்லது அவனது சகாவான மூக்கன் "டே டஸ் ஸ்கூல் விட்டாச்சு" என காதில் சொல்லுவார்கள் , உடனே யாராவது போகிறார்களா இல்லையா எனக்கூட பார்க்காது அவனுடைய பையை தூக்கிக்கொண்டு ஒடி விடுவான் . பாதி ஸ்கூலை iவிட்டு நூறு மீட்டர் வந்த பிறகுதான் அவனுக்கு புத்தி வரும் . கடுப்புடன் திரும்பி வந்து காரணமானவர்களை திட்டுவான்.

ஒருநாள், தலைமை ஆசிரியர் கண்ணில் இந்த காட்சி பட்டு தொலைக்க உடனே அவனை கூப்பிட்டு கண்டித்தார். காய்ந்த கேசரி ஜெகதீசனுக்கும் ( டஸ் தோழன்) டிஸ்க்கும் சண்டை வந்து இருக்கும் போது சில வாக்கியங்கள் கலவரத்தை தூண்ட கூடிய முறயில் அமைந்து இருக்கும்,

" உங்க கடை கேசரி எனக்கு பனியன் தைக்க ஆகிவிட்டது"
" உங்க கடை போண்டா கல்லு போல அடிவிழது"
"தோசை யை என் தம்பி பஸ் ஒட்டி விளையாடுறான்"

" உங்க கேபிள் விழுந்து ஊர்ல நாலு பேருக்கு கண்ணு போச்சு"

"கிழவிகள் உங்க tv யை பார்த்து மண்டைய போட்டு விட்டது"

(காஞ்ச கேசரி ஜெகதீசன் டஸ் இன் தீவிரமான நண்பன்)

இப்படி பல வழிகளில் டஸ் இன் புகழ் பரவி அதில் இந்த காஞ்ச கேசரி ஜெகதீசனும் முன்னால் சொன்னவனும் பலமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள், இவர்கள் இப்படி என்றால் பாழப்போன இந்த எக்ஸாம் வந்து அவனவன் படிப்பு நாறிக்கொண்டு இருக்கும் . படிப்பவர் பக்கம் நம்ம கோஸ்டி மொத்த மாக சாயும். ஆனால் என்ன செய்வது இதில் டஸ் மட்டும் படித்து பாசாகிவிடுவான். மத பய புள்ளைக வழக்கம் போல ஆங்கிலத்திலும் கணக்கிலும் பெயிலாகி முழித்துக்கொண்டு இருப்பார். என்ன செய்வது ஆசிரியர் பின்பக்கத்தில் தூசி முழுவதும் போகும் அளவுக்கும் ஒரு இன்ச் வீங்கும் அளவுக்கும் நொச்சி குச்சியால் பின்னி பெடலெடுத்து விடுவார். அப்போது தான் டஸ் க்கு வாழ்நாளின் பிறப்பின் பயன் அடைவான்

சனி, 20 டிசம்பர், 2008

குட்டியானையின் அபாரம்


யானைக்குட்டி மச்சான் ( .முருகன்) பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும். தன்னுடைய கால் கட்டைவிரலை கூட தன்னால் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி. யானை குட்டி என்றும் குட்டி யானை என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற நமது . முருகன் என்போரை தெரிந்து கொள்ளவில்லையாயின் வாழ்வின் பயனை நீங்கள் தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான். ஆளுதான் அப்படியே தவிர குட்டி யானை யார் என்ன சொன்னாலும் எங்களிடம் உண்மையா பொய்யா என்று யோசித்து கூட பார்க்காமல் எங்களிடம் கூறி பல தடவை மூக்குடைந்து போனாலும் கடமையே கண்கண்ட தெய்வமாக அதனையே சிரமேற்கொண்டு செய்து வந்தான் .

சொல்லுவதெல்லாம் பொய் பொய்யைத்தவிர வேறு ஒன்றுமில்லை என பிறக்கும் போதே சபதம் எடுத்து வந்து இருப்பான் போல( பல பொய்களை, புளுகு களை கூசாமல் பேசுவதில் கலைஞன் உதாரணமாக வல்லரசு படம் மதுரை மாவட்டத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய்க்கு ஓடியது என கூறும் அவனின் உண்மை தன்மை )

பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் லேப்இல் நிறமாலைமானி என்று ஒன்று உண்டு . இயற்பியல் ஆசிரியர் அதனை சரி செய்து வைத்து விட்டு அளவீடு மட்டும் எடுத்துக்கொள்ளும்படி அந்த குழுவிற்கு கூறி இருந்தார். யானைக்குட்டி தான் அந்த குழுவில் லீடர் போல இருந்தான் . அளவீடுகளை எடுக்கும் முன்னர் அந்த கருவியின் போகசினை மாற்றி விட்டான். அளவீடுகள் எல்லாமே தவறாகவே காட்டி இருக்கிறது என அந்த ஆசிரியரிடமும் கூறி விட்டான் . அந்த ஆசிரியர் இதுவரை மாணக்கரை திட்டியது கூட இல்லை ஆனால் நமது குட்டி செய்த கைங்கர்யத்தால் அந்த கருவி சிறிது பழுதடைந்து விட்டது அவ்வளவுதான் யானை முதுகில் கடம் வாசித்து விட்டார். அன்றில் இருந்து அந்த ஆசிரியர மீது கடும் சினத்துடன் இருந்து வருகிறான்.
வேதியியல் லேபில் ஆசிரியர் அளவு கொடுத்த கணக்கை செய்யாமல் இவனாக ஒரு அளவு கண்டறிந்து அதனை அதனை ஆசிரியரிடம் கூறுகையில் அவன் கன்னம் பழுது பார்க்கப்பட்டது.

இப்படி எவ்வளவோ செய்து, வங்கி இருந்தாலும். அப்படியும் சுட்டு போட்டாலும் உண்மை வராது. இந்த லட்சணத்தில் கல்லூரி கலங்களில் யாரோ செய்த தவறுக்காக யானை அந்த கூட்டத்துடன் சேர்ந்து இருந்த ஒரே காரணத்தால் ஒரு மாத காலம் நீக்கப்பட்டு தியாகி என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

பந்தா பண்ணுவதில் குட்டிக்கு நிகர் குட்டி தான், சப்ப மேட்டருக்கெல்லாம் ஓவரை சீன் போட்டு மூக்குடைந்து போவதில் மன்னனாய் இருந்தான். இதனாலோ என்னவோ இவன் புகழ் மங்காமல் உலகில் ஒளிவீசுகிறது .


திங்கள், 15 டிசம்பர், 2008

முட்டைகண்ணு கணேசனின் பதில்கள்

காலாண்டு ஒரு பாவச்செயல்
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

இந்த அரபரிச்சை (அரையாண்டு தேர்வு ) ஏன்தான் வருகிறதோ என்று எல்லோரும் தத்தம் பாசையில் புலம்பிய காலங்களில், அதாவது என்னை போல சராசரிக்கும் கீழ உள்ள மாணவர்களை மிகவும் பதம் பார்க்கும் தேர்வுகளில் ஒன்று இந்த அரையாண்டு அரக்கன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்றவன் நண்பனாக இருந்தான். முட்டைகண்ணு கணேசன் என்ற பட்டம் கொண்டு இருந்தான். ஆளு பார்க்கவே காமெடியாய் இருப்பான். இந்த லட்சணத்தில் குரல் வேறு மிக பிரமாதமாக இருக்கும். கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல். ஆளு நிதானமாய் பேசினால் கேட்க கூடியாதாயும், அவசரமாக பேசினால் மேற்கூறிய முறைப்படியும் இருக்கும். ஆதலால் பல புனைபெயர்கள் கொத்து கொத்தாக அவனை சரணடைந்த வண்ணம் இருந்தன.

பெயருக்கு ஏற்றது போல தொந்தியும் கூடவே இருக்கும் ( தும்பிக்கையும் எலியும் இல்லை ). அரையாண்டில் இருந்து அவனுக்கு பிடித்து சனியன். அறிவியல் சமூகவியல் பாடங்களில் நாங்கள் சும்மாவே முப்பத்தி ஐந்து எடுக்க பகீரத பிரதானம் எடுப்போம். என்ன செய்யலாம் என வெங்கு விடம் கேட்டோம் ( வெங்கு தான் அப்போது லீடெர்)
"அடுச்சு விடுவேன் மார்க்கு போடுவார்கள் "என ரகசியத்தை போட்டு உடைத்தான்.

நாங்கள் அதனை சீரியசாக எடுக்காமல் எதோ தெரிந்ததை எழுதி விட்டு மாற்ற வைகளை விட்டு விட்டு வந்து சேர. முட்ட கண்ணு மச்சான் மட்டும் நிறைய எழுதியிருக்கிறதை தம்பட்டம் அடித்து கொண்டு இருந்தான் . எங்களுக்கு அடிவயிற்றில் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது.

திருத்திய பேப்பர்கள் வர ஆரம்பித்தன, பயம் தொண்டையில் சேர் போட்டு அமர்ந்தது. வழக்கம் போ சயின்ஸ் வாத்தியார் நடராஜன் (சமூகவியலுக்கு மட்டுமே எங்களுக்கு வந்தார்) முன்னோட்டத்துடன் ஆரம்பித்தார். டேய் உங்க பேப்பர திருத்தும் போது போற வாற சார்களெல்லாம் ஒருமாதிரியாய் பார்த்து விட்டது போறாங்க. நானா சிறுச்சுகிட்டு இருக்கேன். என்ன செய்ய அந்தமாதிரி எழுதி இருக்கிறீங்க. அவன் யாருன்னு நான் பாத்தாகணும்" அப்பிடீன்னு சொல்லிட்டு நம்பர் சொல்லிட்டு பேப்பர் குடுக்க ஆரம்பிச்ச பின்னாடி, நம்ம முட்ட கண்ணு மச்சான் பேப்பர் வரும்போது. வாடா நீதான அது ?

மாவீரர் பத்தி எழுத சொன்ன இந்த நாயே என்ன எழுதி இருக்குன்னு பாருங்க படி அந்த கேள்விய நீ எழுதுன பதிலோட சேர்த்து . வாசிக்க ஆரம்பித்தான்


" மகாவீரர் ஒரு பெரிய வீரர். ஒரு சமயம் காட்டுக்கு சென்று மன்னரை காப்பாற்றினார். அவர் பல பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றியவர். எனவே அவர் மகாவீரர் என அழைக்க படுகிறார்."

அடி விழா ஆரம்பமானது. டவுசரின் தூசி பறக்க பறக்க வெளுக்க ஆரம்பித்தார் அவனை. மாவீரர் என்ற பட்ட பெயரும் ஒட்டிக்கொண்டது.

அடுத்த பீரிடு அறிவியல், தமிழரசி வந்தார் (எங்கள் அறிவியல் ஆசிரியை). ஏற்கனவே நம் முட்ட கண்ணு விழி பிதுங்கி கண்ணீர் குளத்தில் நீந்தி இப்போது தான் கரைஎறி இருக்கான் . அதற்குள் அடுத்த வினை ஆரம்பமானது கொழுப்பு பற்றிய கேள்வியை " கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு வயிறு வீங்கி குண்டாக இருக்கும் வயிற்றில் ஒரு குத்து விட்டால் அழுது விடுவார்கள் " என பதில் எழுதி இருந்தான் நம்ம ஆளு . அப்போது அடின்னாலும் அடி அப்படி ஒரு அடி . முழுதாய் வெளுத்து வாங்கப்பட்டு வந்து சேர்ந்தான்.

இப்படி அடிபட்டு அடிபட்டே படிக்க இயலாமல் தன்னுடைய மாணவர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு வேலைக்கு அந்த ஆண்டிலேயே போய்விட்டான்